×

ரூ.5,000 கோடி மோசடி நியோமேக்ஸ் இயக்குநரின் ஜாமீனை ரத்து செய்ய மனு: போலீசார் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை, எஸ்.எஸ். காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிறுவனம் அதிக வட்டி ஆசை காட்டி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்து ரூ.5,000 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ நிர்வாகி வீரசக்தி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கைதானவர்களில் கமலக்கண்ணன் உள்ளிட்ட சிலர் ஜாமீன் பெற்றனர்.

இந்நிலையில் கமலக்கண்ணனுக்கு மதுரை பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) கடந்த நவ.10ல் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி, விருதுநகர் மாவட்டம், இ.சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ரவிசங்கர் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். அதில், ‘கமலக்கண்ணனிடம் போலீசார் முழுமையாக விசாரிக்கவில்லை. டெபாசிட்தாரர்கள் குறித்த விபரம் போதுமானதாக இல்லை.

ஜாமீனில் வந்தவர் முதலீட்டாளர்களை புகார் கொடுக்கவிடாமல் தடுத்து வருகிறார். எனவே, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி வீ.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக கமலக்கண்ணன் மற்றும் போலீசார் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

The post ரூ.5,000 கோடி மோசடி நியோமேக்ஸ் இயக்குநரின் ஜாமீனை ரத்து செய்ய மனு: போலீசார் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Neomax ,Madurai ,Madurai, SS. Colony ,Neomax Properties (P) Ltd. ,Dinakaran ,
× RELATED நியோமேக்ஸ் மோசடி: மேலும் 4 பேர் கைது